×

காஷ்மீரில் இரு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: பயங்கரவாதி கைது !

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அனந்த்நாக் மாவட்டத்தின் பதிங்கோ பகுதியை சேர்ந்த இர்பான் அகமது தர் என்ற பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சதி திட்டம் தீட்டி தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என உளவு துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றில் தலைநகர் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில், காஷ்மீர் எல்லையில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்ததும், அதனை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்ததும் நடந்தது. இதனையடுத்து, , காஷ்மீரில் இரு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.  இதில், ஒரு வழக்கானது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்திண்டி பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டதுடன் தொடர்புடையது. மற்றொரு வழக்கு, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய லஷ்கர்-இ-முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது. இவற்றில் காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினருடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இணைந்து முதல் வழக்கில் தொடர்புடைய 6 இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தினர்.

இதேபோன்று லஷ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  இதில், அனந்த்நாக் மாவட்டத்தின் பதிங்கோ பகுதியை சேர்ந்த இர்பான் அகமது தர் என்ற பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


Tags : NIA ,Kashmir , Kashmir, terrorist, arrested
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!