×

மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முறையாக ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி: புனே பெண்ணுக்கு தொற்று கண்டுபிடிப்பு !

புனே: மகாராஷ்டிராவில் முதன்முறையாக ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. புனே மாவட்டத்தில் உள்ள புரந்தர் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் நோயாளிக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்துள்ளதாகவும், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜூலை தொடக்கத்தில் இருந்து புரந்தர் தாலுகாவில் உள்ள பெல்சார் கிராமத்தில் இருந்து பல பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், 5 மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்ஐவி) க்கு அனுப்பப்பட்டன, அவற்றில் 3 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு, என்ஐவி குழு ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை பெல்சார் மற்றும் பரிஞ்சே கிராமங்களுக்குச் சென்று 41 பேரின் இரத்த மாதிரிகளைச் சேகரித்தது. இதில், சிக்குன்குனியாவுக்கு 25 பேரும், டெங்குவிற்கு 3 பேரும், ஜிகா வைரஸுக்கு ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மாநிலத்தின் விரைவுக் குழு சனிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று உள்ளூர்வாசிகளிடம் அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்துப் பேசியுள்ளனர். கிராமத்தில் வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறையும் கணக்கெடுப்பு நடத்தும். மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று புனே மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. களத்தில் உள்ள குழுக்களின் செயல்திறன் காரணமாக இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கேரளாவில் மட்டுமே இந்த ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புகள்  பதிவாகியிருந்தன.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் கேரியர்களான ஏடிஸ் கொசுக்களால் தொற்று பரவுகிறது. ஜிகா வைரஸ் தொற்றுக்கான சில பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், உடல் வலி, சொறி, வெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி. அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்கள் நீடிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் அறிகுறிகளை உணர்வதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Maharashtra ,Pune , State of Maharashtra, Zika virus
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...