திருமங்கலம் 100 அடி சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணாநகர்: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் போன் செய்த மர்ம நபர், திருமங்கலம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து, உடனே திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாலில் இருந்த 500க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றினர்.பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து சுமார் 2 மணி நேரம் சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து விசாரித்தபோது, அம்பத்தூரை சேர்ந்த 9 வயது சிறுவன் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. சிறுவன் மற்றும் பெற்றோரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Related Stories:

>