×

குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றிகளை 3 மாதத்தில் மாற்ற வேண்டும்: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு

சென்னை: சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,  பகிர்மானப்பிரிவின் இயக்குநர் செந்தில்வேல் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.  

பிறகு அவர், ‘தமிழகத்தில் முதற்கட்டமாகக் குறைந்த மின்னழுத்தம் உள்ள மின்மாற்றிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கு ரூ.625 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 6,830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5,705 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவி மின்பளுவைக் குறைப்பதற்கும், 3,200 கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி குறைந்த மின்னழுத்தத்தை ஏற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை மூன்று முதல் நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

* 1.59 லட்சம் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
‘மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 1,71,344 புகார்கள் வரப்பட்டுள்ளன. அதில் 1,59,186 புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் 12,158 புகார்கள் நடவடிக்கைகளில் உள்ளன.

* தமிழகத்தில் மின்தடை ‘பூஜ்ஜி’யமாக மாற்றுவோம்
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்படாத பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கும் வகையில் 2.30 லட்சம் பணிகள் திட்டமிடப்பட்டு 2.72 லட்சம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார். 14 லட்சத்து 69 ஆயிரம் பேர் மின்கட்டணத்தை தாங்களாகவே மாற்றியமைத்துள்ளனர். மே மாதத்திற்கு முன்பு வரை மின்தடையே இல்லாமல் இருப்பது போன்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க எதிர்கட்சி முயற்சிக்கிறது. 30 நிமிடங்களுக்கு மேலாக மின்தடை இருக்கும் இடங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. இதை படிப்படியாக குறைத்து பூஜியம் என்ற இலக்கை அடையும் முயற்சியில் உள்ளோம் என்றார்.

Tags : Minister of Power , Low voltage transformers to be replaced in 3 months: Order of the Minister of Power Senthilpalaji
× RELATED திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு...