இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி திமுக பிரமுகர் படுகொலை: உத்திரமேரூர் அருகே பரபரப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 6 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (50). திமுக ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மனைவி சங்கரி (48). இவர்களுக்கு தினகரன் (21), தமிழன் (17) என்ற மகன்களும், திவ்யபாரதி (19) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சண்முகம், வாலாஜாபாத்துக்கு பைக்கில் சென்றார். இரவு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.  திருமுக்கூடல் அருகே வந்தபோது, சாலையோரம் பைக்குடன் நின்றிருந்த 2 பேர், திடீரென சண்முகத்தை வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தபடி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதை பார்த்ததும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பொதுமக்கள் வந்து பார்த்தபோது, சண்முகம் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், கொலை நடந்த இடத்தில், கொலையாளிகள் பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் பைக்கை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன், அதே கிராமத்தை சேர்ந்த முத்து என்பவருக்கும், சண்முகத்துக்கும் மதூர் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்து, அவரது மகன் நித்யாபதி ஆகியோர் சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக சண்முகம், காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து, தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>