×

உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் கோரும்போது உரிய விதிகளை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்: தலைமை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பம்மல் நகராட்சியில் கழிவுநீர் அகற்றுதல் மற்றும் கழிவுநீர் பாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் பலர் பங்கேற்றனர். இறுதியில் டெண்டர் டி.பன்னீர்செல்வம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி கே.அன்னபூரணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.சரவணன், அரசு தரப்பில் வக்கீல் ஆ.செல்வேந்திரன் ஆஜராகினர். மனுதாரர் வக்கீல் ஏ.சரவணன் வாதிடும்போது, டெண்டர் ஆவணங்கள் டெண்டர் திறப்பிற்கு முன்பே  பிரிக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறியிருந்தார். பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.ஜானகிராமன் அதை மறுத்து வாதிட்டார். பம்மல் நகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் பி.ஸ்ரீநிவாஸ் வாதிடும்போது, டெண்டர் திறந்ததில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய டெண்டரை அறிவித்து  நடைமுறைகளை முடிக்க 45 முதல் 60 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும்  பம்மல் நகராட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. இந்த வழக்கில் மனுதாரர் அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. மாறாக டெண்டர் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு. டெண்டர் விஷயத்தில் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். டெண்டர் முன்பணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். டெண்டர் அறிவிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிபந்தனைகளில் சலுகை காட்டக்கூடாது.

டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று எதிர் மனுதாரர் தரப்பு வக்கீல் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, டெண்டர் நடவடிக்கைகளில் ஊழலை தவிர்க்கவும், ஒரு சார்பு நிலையை எடுப்பதை தடுக்கவும் அரசு உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பணிகளுக்கான டெண்டர் கோரும்போது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.

Tags : Chief Secretary , High Court directs Chief Secretary to instruct officials to abide by proper rules while soliciting tenders in local bodies
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி