புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாத தளபதி உட்பட 2 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தளபதி உட்பட 2  முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை நேற்று சுட்டு கொன்றது. ஜம்முவில் நம்பியன், மர்சர் என்ற வனப்பகுதிகள் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததால், நேற்று காலை அப்பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்கினர். இதற்கு ராணுவம் அளித்த பதில் தாக்குதலில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘‘துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில்  ஒருவனான அபு சபிபுல்லா என்கிற லம்பு , சமீர் தர் என்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவர்களில் சபிபுல்லா, ஜெய்ஷ் அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உறவுக்காரன்.  

தலிபான் தீவிரவாதிகளிடம் வாகனங்களில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்று வெடிக்க வைத்து தாக்குதல் நடத்துவதில் பயிற்சி பெற்றவன். ஆப்கானில் அடிக்கடி அதுபோல் நடத்தப்படும் வாகன தாக்குதலின் பாணியிலேயே கடந்த 2019ம் ஆண்டில் புல்வாமா தாக்குதலையும் நடத்தினான்,’’ என்றார். புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த வழக்கில் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரையில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். டிரோன் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கைது: ஜம்முவில் கடந்த மாதம் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் தொடர்பாக,  ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று சோதனை நடத்தியது. இதில், இந்த டிரோன் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: