×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி !

டோக்யோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரை இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். டோக்யோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான சு-யிங் தை எதிர்கொண்டார்.

முன்னதாக இருவருக்கும் இடையிலான கடைசி 3 போட்டிகளில் தைவான் வீராங்கனையே வெற்றி பெற்றிருந்த போதிலும் சிந்து மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதே நேரத்தில் 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே சு-யிங் தை-ஐ சிந்து வீழ்த்தியிருந்தார்.

இருவருமே மாறி மாறி புள்ளிகளை பெற்று சமநிலையுடன் ஆட்டத்தை நகர்த்தினர். இருப்பினும் 21 - 18 என்ற நேர் செட் கணக்கில் தைவான் வீராங்கனை முதல் செட்டில் வெற்றி பெற்றார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் சிந்து ஒரு செட்டை இழப்பது இதுவே முதல் முறையாக இருந்தது. இதனையடுத்து, 2வது செட்டில் 21 - 12 என்ற கணக்கில் தைவான் வீராங்கனை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, தற்போது அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். இருப்பினும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ்-ஐ சிந்து எதிர்கொள்வார். இந்தப் போட்டி நாளை மாலை  மணிக்கு நடைபெறவுள்ளது.

Tags : Tokyo Olympics badminton ,Via ,Pyeongchang Olympics CV , Olympics, badminton, Indian athlete PV Sindhu, defeat
× RELATED இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுக்கு...