×

‘பெகாசஸ்’ உள்ளிட்ட முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க மறுப்பு: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிகிறது?: எதிர்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் ஒன்றிய அரசுக்கு சிக்கல்

புதுடெல்லி: பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி வரும் ஆக. 13ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாள் முதல் ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கொரோனா பரவலை சரியாக கையாளாதது போன்ற பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகின்றன. குறிப்பாக ‘பெகாசஸ்’ விவகாரம் தொடர்பாக முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. முன்னதாக ‘பெகாசஸ்’ குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு முன் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த குழுவின் முன் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஆஜராகவில்லை. அதேபோல், குழுவின் உறுப்பினர்களாக உள்ள பாஜக எம்பிக்கள் புறக்கணிப்பால், நிலைக் குழு கூட்டமும் முழுமை பெறவில்லை. ‘பெகாசஸ்’ விவகாரத்தில் ஒன்றிய  அரசு வெளிப்படத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கடந்த 9 நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றன.

ஒவ்வொரு நாளும் அவை கூடுவதற்கு முன்பாக, பெகாசஸ், வேளாண் சட்டம் திரும்ப பெறுதல் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பான நோட்டீசை எதிர்கட்சி எம்பிக்கள் அளித்து வருகின்றனர். ஆனால், அந்த ஒத்திவைப்பு நோட்டீஸ் ஏற்கப்படுவதில்லை. இவ்வாறாக எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதால், அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவை நடவடிக்கைகளும் தினமும் பல மணி நேரம் ஒத்திவைக்கப்படுகின்றன.  பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரே குரலில் ஆளும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதால், திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்னதாக (ஆக. 13) கூட்டத் தொடர் அமர்வை முடித்துக் கொள்ளலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், ‘மழைக்கால கூட்டத்தொடர் நாட்களின் எண்ணிக்கையை  குறைக்க ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மக்கள் தொடர்பான எந்தவொரு பிரச்னையையும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை விரும்பவில்லை. இதனால், மக்கள் வரிப்பணமும், நேரமும் விரையமாகிறது. இருந்தும், இரு அவைகளும் அமைதியாக நடப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறோம். அதற்கான சில முயற்சிகளை எடுத்துள்ளோம்’ என்றார்.

ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, ‘பெகாசஸ் மீதான விவாதத்தைத் தவிர, வேறு எதைப் பற்றியும் விவாதிக்க வேண்டாம். மிக முக்கியமான பிரச்னை குறித்த எங்கள் கோரிக்கையில் உறுதியாக உள்ளோம்’ என்று தெரிவித்தன. முன்னதாக கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவை நடவடிக்கைகளை புறக்கணித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். இவரது டெல்லி வருகை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, எதிர்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால், அதனை எதிர்கொள்ள முடியாமல் எவ்வித விவாதமுமின்றி பல மசோதாக்களை ஒன்றிய அரசு அவையில் நிறைவேற்றி வருகிறது. பெகாசஸ் உள்ளிட்ட விவகாரத்திலும் எதிர்கட்சிகள் வலுவான எதிர்ப்பை காட்டி வருவதால் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்படலாம் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : Pegasus' ,United Government , Parliamentary Session
× RELATED குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்