×

குமரி மேற்கு கடற்கரையில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை நீங்குகிறது: விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றும் பணி தீவிரம்

நாகர்கோவில்: மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடை 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிவரையும், மேற்கு கடற்கரையான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் மே 31ம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31ம் தேதி வரை விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஏப்ரல் 15ம் தேதி கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி ஜூன் 15ம் தேதி தடை நீங்கியது. மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த மே மாதம் 31ம் தேதி நள்ளிரவு முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை அமலில் இருந்து வருகிறது. இந்த தடை இன்று 31ம் தேதி நள்ளிரவுடன் நீங்குகிறது. நாளை முதல் விசைப்படகுகள் வழக்கமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்.

குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இந்த தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளில் இன்ஜின்களை பொருத்துவது, பெயிண்ட் அடிப்பது, பேட்டரி மற்றும் ஒயரிங், வலைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று நள்ளிரவு முதல் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் விசைப்படகுகளுக்கு தடை நீங்குவதால் விசைப்படகுகளுக்கு ஐஸ் ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் உற்சாகமடைந்து உள்ளனர்.

Tags : Kumari , Kumari West Coast
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...