×

சென்னை மண்டலத்தில் 16 ரயில்களை தனியார் பங்கேற்புடன் இயக்க திட்டம்: ஏலத்தில் தனியார் பங்கேற்காததால் அதிர்ச்சி

சென்னை: சென்னை மண்டலத்தில் ரயில்களை தனியார் இயக்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க யாரும் முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தனியாருடன் இணைந்து 12 மண்டலங்களில் 152 ஜோடி ரயில்களை இயக்கும் திட்டம் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியாருடன் இணைந்து 29 ஜோடி ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக 7,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்தம் உள்ள 12 மண்டலங்களில் டெல்லி 1, டெல்லி 2, மும்பை 2 மண்டலங்களில் மட்டுமே ரயில்களை இயக்க தனியார் முன்வந்துள்ளன. எஞ்சிய சென்னை உட்பட 9 மண்டலங்களில் ரயில்களை இயக்க தனியார் ஆர்வம் காட்டவில்லை. சென்னை மண்டலத்தில் ரயில்வே, தனியார் இணைந்து 16 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. இவற்றில் தாம்பரம் - மதுரை, சென்னை - லோக்மான்ய திலக் வாரம் இருமுறை ரயில், சென்னை - மங்களூரு, சென்னை - திருப்பதி வாராந்திர ரயில்கள் உள்பட 16 ரயில்களும் சென்னை - ஜெய்ப்பூர், சென்னை - ஹவுரா ஆகிய தொலைதூர ரயில்களையும் தனியார் பங்கேற்புடன் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதற்கான ஏலத்தில் தனியார் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நிபந்தனைகளை தளர்த்தி மீண்டும் ரயில்களை தனியார் இயக்க ரயில்வே ஏலம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Tags : Chennai Zone , railway
× RELATED 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கான...