லீ மெரிடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் எடுத்துக்கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை

சென்னை: லீ மெரிடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் எடுத்துக்கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ரூ.423 கோடி சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தை எம்.ஜி.எம் நிறுவனம் எடுத்துக்கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. கம்பெனிகள் சட்ட தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து லீ மெரிடியன் ஓட்டல் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. கம்பெனிகள் சட்ட தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து லீ மெரிடியன் இயக்குனர் பழனி பெரியசாமி மேல்முறையீடு செய்தார்.

அப்பு ஹோட்டல் என்ற பெயரில் சென்னை மற்றும் கோவையில் லீ மெரிடியன் ஹோட்டல் நிர்வாகம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த ஹோட்டல் நிர்வாகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இதன் பிறகு இந்த நிர்வாகத்தின் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்கும், மீட்டெடுப்பதற்கும் தேசிய கம்பெனிகள் சட்ட ஆணையம் நடவடிக்கை எடுத்தது. தேசிய கம்பெனிகள் சட்ட மீட்டெடுப்பு அதிகாரியாக தேவராஜன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த சொத்துக்களை கணக்கீடு செய்து ரூ.423 கோடி என மதிப்பீடு செய்தார். இந்த மதிப்பீட்டினை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் லீ மெரிடியன் இயக்குனர் பழனி பெரியசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் சொத்து மதிப்பீடு என்பது தவறாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் சுமார் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மதிப்பீடு செய்ததில் முறையான சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். நிறுவனத்திற்காக கடன் வாங்கியவர்களுக்கு தான் கடனை செலுத்த தயாராக இருப்பதாகவும் அதேபோல ரூ.450 கோடி தற்போது டெபாசிட் தொகையாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இதுதொடர்பாக ரூ.150 கோடி டெபாசிட் செய்துவிட்டதாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட ரூ.423 கோடி மதிப்பிலான சொத்துக்களை எடுத்துக்கொள்வதற்கான உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவன நிர்வாகி ராஜகோபாலன் மற்றும் மீட்டெடுப்பு அதிகாரி ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: