×

பெங்களூரில் இருந்து லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி போதை புகையிலை பொருட்கள் பறிமுதல்: தப்பியோடிய கும்பலை பிடிக்க சேலம் போலீஸ் தீவிரம்

சேலம்: சேலத்துக்கு 3 லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி மதிப்புள்ள போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு லாரி பார்க்கிங் ஸ்டாண்டில் உள்ள 2 லாரிகளில் போதை புகையிலை பொருட்கள் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.  உடனே போலீசார் சம்பவ இடம் சென்று, அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளின் அருகே இருந்து 4 பேர் கும்பல் தப்பியோடினர். இதையடுத்து, லாரியை போலீசார் சோதனையிட்டனர்.

அதில், ஒரு லாரியில் 131 மூட்டைகளிலும், மற்றொரு லாரியில் 117 மூட்டைகளிலும் போதை புகையிலை பொருட்கள் இருந்தன. 7,300 கிலோ எடை கொண்ட இதன்மதிப்பு ரூ.1.02 கோடியாகும். இதனை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து ரகசியமாக சிறிய வாகனங்களில் பிரித்து அனுப்பி, சப்ளை செய்ய இருந்தது தெரியவந்தது. தப்பியோடிய லாரி டிரைவர்கள் உள்ளிட்ட 4  பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், சேலம் உடையாப்பட்டி பை-பாஸ் சாலையோரம் லாரியை நிறுத்தி வேனில் புகையிலை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த 4 பேர் கும்பல் போலீசை பார்த்ததும் தப்பியது.

அதில் லாரி டிரைவர் ஒருவரை பிடிக்க முயன்றபோது அவர் சட்டையை கிழித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். லாரி, வேனை சோதனையிட்டபோது, உள்ளே மாட்டுத்தீவன பண்டலுக்கிடையே 2,397 கிலோ போதை புகையிலை பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.33 லட்சமாகும். புகையிலை பொருட்களை கடத்தி வந்து தப்பியோடிய 4 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை வேளையில் 3 லாரிகளில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள போதை புகையிலை பொருட்கள் சிக்கிய இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Bengaluru ,Salem , Bangalore, lorry, narcotics, seizure, police
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...