×

அதிமுக ஆட்சியில் நெல்லை ஸ்மார்ட் சிட்டி பணியின்போது ரூ.100 கோடிக்கு மணல் திருட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ஸ்மார்ட் சிட்டி பணியின்போது மணல் அள்ளிய முறைகேடு குறித்து சிறப்பு குழு விசாரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை, பழைய பேட்டையைச் சேர்ந்த சுடலைகண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கடந்த 2018ல் பணிகள் துவங்கின. கட்டுமானப் பணியின்போது அடித்தளம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் அருகில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இந்தப் பகுதியில் அதிகளவில் ஆற்று மணல் நிறைந்துள்ளது.

சுமார் 30 அடி ஆழம் வரை ஆற்று மணல் படிந்திருந்தது. பேருந்து நிலைய கட்டுமானப்பணியை பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. அதிகளவில் மணல் அள்ளி கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தேன். சம்பந்தப்பட்ட இடத்தில் தோண்டப்பட்ட மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.  ஆனால், சில அரசியல் பிரமுகர்கள் உடந்தையோடு 120 லோடு மணலையும், 70 லோடு களிமண்ணையும் குறைந்த மதிப்பில் ஏலம் விட்டுள்ளனர்.

இதனால், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை பேருந்து நிலையத்தில் அடித்தளம் தோண்டும்போது அள்ளப்பட்ட மணல் மற்றும் களிமண்ணை சட்ட விரோதமாக விற்பனை ெசய்தது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணியின்போது மணல் கொள்ளை நடந்திருப்பதற்கு போதுமான முகாந்திரம் உள்ளது.

எனவே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. டிஎஸ்பி தகுதிக்கு குறையாத அதிகாரி வழக்கை விசாரிக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு துறைத்தலைவரின் உதவியை பெற்று, மணலை எடுத்து அறிவியல்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கையளிக்க வேண்டும். இந்த மணலில் அரிய வகை தாதுக்கள் உள்ளனவா என்பது குறித்து அறிய, அணுசக்தி துறையின் உதவியை பெறலாம். சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Tags : AIADMK ,Nellai Smart City , AIADMK Rule, Smart City, Sand Theft, CPCIT, Investigation, high court Branch
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...