×

ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு பிரதமருக்கு அதிமுக நன்றி: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  1980ம் ஆண்டு எம்ஜிஆர் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, தமிழகத்தில் சமூக நீதிக்கான முதல் வெற்றியை நிலை நாட்டினார். இதை தொடர்ந்து, மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசால் 13.8.1990ல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அதே சமயத்தில், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்து எந்தவித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.  

இதனை அறிந்த ஜெயலலிதா, சமுதாய நிலையிலும், கல்வி துறையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுகிற வகையில், மண்டல் குழுவின் பரிந்துரைகளை விரைந்து முழுமையாக நிறைவேற்றி செயல்படுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, மருத்துவ கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இதர மத்திய கல்வி நிறுவனங்களில், ஓபிசி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு 14.3.2018 அன்று கடிதம் எழுதினார்.

இதன்படி 27 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசு குழு ஒன்று அமைத்தது. இந்த குழுவில் தமிழ்நாடு அரசின் உறுப்பினராக டாக்டர் உமாநாத் 13.8.2020 அன்று நியமிக்கப்பட்டார்.  இந்த குழுவின் அறிக்கையின்படி நேற்று முன்தினம் மருத்துவ கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு (2021-22) முதலே  அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அதிமுக சார்பில் வரவேற்கிறோம்.  மத்திய அரசு, மருத்துவ கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமருக்கு அதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags : OPC ,EPS ,OPS , OBC Reservation, PM, AIADMK, EPS, OBS
× RELATED வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்...