×

மொத்த தேர்ச்சி வீதம் 99.37 சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேர்வு  முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று மதியம் வெளியிட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 99.37 ஆகும்.  கொரோனா காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதற்காக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இதன்படி 12ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யும் போது, 12ம் வகுப்பில் நடத்தப்பட்ட அலகுத் தேர்வுகள், இடைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் ஆகியவற்றில் மாணவர்கள் பெற்றிருந்த மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதம், 11ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதம், பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பாக 3 பாடங்களில் எடுத்திருந்த மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதம் என மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

அதன்படி தற்போது தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.   இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள், தனித் தேர்வர்கள், 2021ம் ஆண்டு தேர்வில் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஆகியோர் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதலாம்.  இதற்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.  

தேர்வு முடிவுகள் குறித்த விவரம்:
நாடு முழுவதும் உள்ள 14 ஆயிரத்து 88 பள்ளிகளில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு  2021ம் ஆண்டு நடக்க இருந்த தேர்வுக்கு 14 லட்சத்து 30 ஆயிரத்து 188 மாணவ மாணவியர் பதிவு செய்திருந்தனர். அவர்களில்  தனித் தேர்வர்கள் 60 ஆயிரத்து 443 பேர். நேரடித் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 13 லட்சத்து 69 ஆயிரத்து 745 பேர். தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவர்கள் 13 லட்சத்து 4 ஆயிரத்து 561 பேர். இவர்களில் 12 லட்சத்து 96 ஆயிரத்து 318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 99.37 சதவீதம். தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவை 65 ஆயிரத்து 184.

சிபிஎஸ்இ டெல்லி மண்டலத்தை சேர்ந்த 2 லட்சத்து 91 ஆயிரத்து 606 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 135 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 99.84 சதவீதம்.  வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 17 016 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17003 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 99.92 சதவீதம்.   மேற்கண்ட தேர்வு முடிவுகளின்படி, மாணவர்கள் 99.13 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 99.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 0.54 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளை பொறுத்தவரையில் ஜெஎன்வி பள்ளிகள் 99.94%, கேவி பள்ளிகள் 100%, சிபிஎஸ்இ பள்ளிகள் 100%, அரசுப் பள்ளிகள் 99.72%, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 99.48%, தனியார் பள்ளிகள் 99.22% தேர்ச்சியை பெற்றுள்ளன.

இந்த ஆண்டுக்கான தேர்வில் சிறப்பு திறன் கொண்ட மாணவ, மாணவியர் 3925 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3909  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவ, மாணவியரில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 152 பேர் 90 % முதல் 95% வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். 70 ஆயிரம் பேர் 95%க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 6149 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் அறிந்து கொள்ளவும், சிபிஎஸ்இ இணையத்தில் இருந்து தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ள முடியும்.

Tags : CBSE , Total Pass, CBSE, Class 12 Exam,
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...