120 உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழகத்தில் புதியதாக 120 உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் 2021-22ம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் ஆனையர் சமயமூர்த்தி, வேளாண் செயலாளர் ஆப்ரகாம், வேளாண் இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

 வேளாண் சார்ந்த உழவர்களை மதிக்கிற அரசாக இந்த அரசு இருக்கிறது. இதன் காரணத்தால் புதிய எதிர்பார்ப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கிறது. வேளாண் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது குறித்தும், விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள், அதை தீர்ப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்தோம். நல்ல கருத்துகளை வர்த்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வழங்கி உள்ளனர்.  உழவர் சந்தைகளில் நியாயமான விலை கிடைப்பதற்காக தான் கலைஞர் முதல்வராக இருந்தபோது 180 உழவர் சந்தைகளை அமைத்தார். அதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற வேளாண் பொருட்களுக்கு உழவர் சந்தைகளில் நல்ல லாபம் கிடைத்தது.

இடைத்தரகர்கள் இல்லாமல் செய்யக்கூடிய முறைதான் உழவர் சந்தை, அதை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஏற்கனவே உள்ள 180 உழவர் சந்தைகளில் கிட்டத்தட்ட 160 தற்போது செயல்படுகிறது. கடந்த ஆட்சியில் அதை சரியாக கவனிக்காத காரணத்தால் இந்த குறைகள் ஏற்பட்டு இருக்கிறது. அதை நாங்கள் நிவர்த்தி செய்து வருகிறோம்.  அதன்படி, இந்த ஆண்டு புதியதாக 120 உழவர் சந்தைகளை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதை படிப்படியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேரூராட்சி பகுதிகளில், உழவர் சந்தைகள் அவசியமாக தேவைப்படும் பகுதிகளில் அமைக்க போகிறோம்.  இவ்வாறு கூறினார்.

Related Stories:

>