×

ஆண்டுக்கு ரூ.3,000 கோடி மதிப்பில் பணிகள் நடக்கும் நிலையில் ஒப்பந்த நிறுவன கட்டுமான பணியில் குறைபாடு இருந்தால் புகார் தரலாம்: பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை மூலம் சுகாதாரத்துறை, வருவாய், வணிகவரி, பதிவு, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியும், இந்த மருத்துவமனைகளில் பராமரிப்பு பணிகளும் இந்த துறை மூலம் செய்யப்படுகிறது. இதற்காக, ஒவ்வெரு ஆண்டும் ரூ.3 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதியை கொண்டு டெண்டர் விடப்பட்டு, தகுதியான ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பணிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியாமல் இருந்தது. அவ்வாறு புகார் அளித்தால் கூட அதிகாரிகள் சிலர் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடும் நிலைதான் இருந்தது. இதனால், பல நேரங்களில் தரக்குறைவான கட்டுமான பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக விசாரிக்க நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோடல் அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளிக்க பொதுப்பணித்துறையின் www.tnpwd.com என்கிற இணையதளம் வாயிலாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், புகார் அளிப்பவர் பெயர், அவரது மின்னஞ்சல் முகவரி, தொலை பேசி எண், புகார் குறித்த விவரங்களை தெரியப்படுத்தலாம். இந்த புகார்கள் மீது நோடல் அதிகாரி உரிய விசாரணை நடத்துவார். விசாரணையில் கட்டுமான பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒப்பந்த நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறை கட்டிட பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால், இனி வருங்காலங்களில் டெண்டர் எடுத்த நிறுவனங்கள், டெண்டர் எடுத்த மதிப்பு, ஒப்பந்த காலம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஒப்பந்தம் யார் எடுத்தார்கள், வேலை தரமாக நடக்கிறதா, அப்படி இல்லையெனில் அந்த நிறுவனம் பெயரை குறிப்பிட்டு புகார் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Public Works Department , Status of works, contract construction, public works
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...