குற்ற சம்பவம் பற்றி ஊடகங்களில் போலீஸ் கூறுவதை செய்தியாக வெளியிடுவது அவமதிப்பு அல்ல: நடிகை ஷில்பா வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை: ராஜ் குந்த்ரா வழக்கில் ஊடகங்களில் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் செய்திகள் வெளிடப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்குமாறு நடிகை ஷில்பா ஷெட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், போலீஸ் கூறுவதை வெளியிடுவதை அவமதிப்பாக கருத முடியாது என உத்தரவிட்டது. ஆபாச பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நாளுக்கு நாள் பரபரப்பான அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கில் நடிகைகள் உட்பட பல பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். குந்த்ரா அலுவலகத்தில் நடந்த ரெய்டிலும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் குந்த்ரா நிறுவன ஊழியர்கள் சிலர் அப்ரூவராக மாறியுள்ளது, அவருக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் தனது புகழை கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதாகவும், ஊடகங்கள் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள், யூடியூப்களில் வெளியிடுவதை தடை செய்ய கோரியும் நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவற்றிடம் இருந்து மான நஷ்ட ஈடாக ரூ.25 கோடி கோரியிருந்தார். இதன் மீதான விசாரணை, நீதிபதி கவுதம் பாட்டீல் முன்பு நேற்று நடைபெற்றது. ஊடகங்களில் வெளியான சில செய்திகள் மற்றும் வீடியோக்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ஷில்பா ஷெட்டி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பீரேந்திர சராப் வாதிடுகையில், வலைதளங்களிலும், சில சேனல்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள், ஷில்பாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.

வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஊடகங்களிள் இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடவே கூடாது என தடை விதிப்பது, ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாக அமைந்து விடும். ஷில்பா ஷெட்டி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட செய்திகளை பொறுத்தவரை, அவை அவரது புகழுக்கு களங்கம் விளைப்பிப்பதாக காணப்படவில்லை.

ஊடக சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும் இடையிலான கோடு சம நிலையில் இருக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தை நெருக்குவதாக கூட அமைந்து விடலாம். சமுதாயத்தில் பிரபலமான ஒருவர், அவரது தனிநபர் உரிமையையும் தியாகம் செய்ய வேண்டி வரும். இந்த வழக்கில், போலீஸ் தரப்பில் கூறுவதை வெளியிடுவது, புகழை கெடுப்பதாக அமைந்து விடாது. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. சந்தேகத்துக்கு இடமாக உள்ளதை வேண்டுமானால் தடை செய்யலாம் என்றார். அதேநேரத்தில், சில சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 3 வீடியோக்களை மட்டும், அவை புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருதுவதற்கு இடமுள்ளதால், அவற்றை நீக்க உத்தரவு பிறப்பித்தார். வழக்கின் விசாரணை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>