பெகாசஸ் விவகாரம் என்எஸ்ஓ அமைப்பிடம் இஸ்ரேல் விசாரணை

ஜெருசலேம்: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக என்எஸ்ஓ அமைப்பிடம் விசாரணையை தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை பாரிஸ் சென்ற இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென்னி கன்ட்ஸ், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லியிடம் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக என்எஸ்ஓ அமைப்பிடம் விசாரணையை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், `குற்றங்கள், தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க, சட்டத்துக்குட்பட்டு பிற நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே இந்த மென்பொருளை விற்பனை செய்ய என்எஸ்ஓ.வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், விதி மீறல் இருக்கிறதா என்று புலனாய்வுக்கு உட்படுத்தப்படும்,’ என்று தெரிவித்தனர்.

Related Stories: