×

மாநிலங்களவையில் விசில் அடித்த எம்பி.க்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு: துணை ஜனாதிபதி வெங்கையா எச்சரிக்கை 2வது வாரமாக முடங்கிய நாடாளுமன்றம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2வது வாரமும் எம்பிக்கள் அமளியால் முழுமையாக முடங்கியது. மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் சிலர் விசில் அடித்ததால் கோபம் அடைந்த வெங்கையா நாயுடு, ‘பொறுமைக்கும் எல்லை உண்டு’ என எச்சரித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. பெகாசஸ், புதிய வேளாண் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததால் முதல் வாரம் முழுமையாக நாடாளுமன்றம் முடங்கியது. 2வது வாரமான இந்த வாரமும் நாடாளுமன்றத்தை செயல்பட எம்பி.க்கள் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து, 8வது நாளாக நேற்று முன்தினம் இரு அவைகளும் முடங்கிய நிலையில், 2ம் வாரத்தின் கடைசி நாளான நேற்றும் மக்களவை, மாநிலங்களவை முடங்கியது. மக்களவை காலையில் கூடியதும் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். இதற்கு ஆளும் பாஜ எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் வரும் 2ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவை காலையில் கூடியதும் அமளி காரணமாக பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, அமளி தொடர்ந்ததால் வரும் 2ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. வரும் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில் முதல் 2 வாரமும் முடங்கி உள்ளது.

இதற்கிடையே, பிற்பகல் வரை அவையை ஒத்திவைக்கும் முன்பாக மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு அவையில் பேசுகையில், ‘சில எம்பிக்களின் செயல் அவை கண்ணியத்தையும், கவுரவத்தையும் புதிய வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளன. பழைய வழக்கப்படி சிலர் அவையில் விசில் அடிக்கின்றனர். சிலர் பதாகைகளை கொண்டு, அமைச்சர்களை மறைக்கின்றனர். இன்னும் சிலர் பாதுகாவலர்களின் தோள் மீது கைபோடுகின்றனர். எந்த சமயத்திலும் அவையின் மாண்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. என் முன் 2 வழிகளே உள்ளன.

ஒன்று, நடப்பவற்றை அப்படி விட்டு அவையை சந்தைக் கடையாக மாற்றுவது, இன்னொன்று நடவடிக்கை எடுப்பது. நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அவை உறுப்பினர்கள் கொண்டு செல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவையின் பொறுமையை இழக்கச் செய்து விடக்கூடாது,’ என எச்சரித்தார்.

பெகாசஸ் என்பது பிரச்னையே அல்ல
ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெகாசஸ் என்பது ஒரு பிரச்னையே அல்ல. மக்கள் சார்ந்த பிரச்னைகள் பல உள்ளன. அதைப் பற்றி விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், அவையில் சில எம்பிக்களின் செயல் துரதிருஷ்டவசமானதாக உள்ளது. நாங்கள் எந்த விவாதமும் இன்றி மசோதாக்களை நிறைவேற்ற விரும்பவில்லை,’’ என்றார்.

அமளிக்கு இடையே 4 மசோதா தாக்கல்
இரு அவையிலும் அமளிக்கு இடையே சில மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று மக்களவையில், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்க வழிவகுக்கும் பொது காப்பீடு வணிக (தேசியமயமாக்கல்) சட்ட திருத்த மசோதா, தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணைய மசோதா ஆகியவையும், மாநிலங்களவையில் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைச் சட்ட திருத்த மசோதா, முதலீட்டு காப்புறுதி உத்தரவாத மசோதா ஆகியவையும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணைக்கு வராத அதிகாரிகள் சபாநாயகரிடம் சசிதரூர் புகார்
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், கோரம் இல்லாததால் இந்த கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டம் நடக்க இருந்த கடைசி நிமிடத்தில் வெவ்வேறு காரணங்களை கூறி அமைச்சக அதிகாரிகள் ஒருவர் கூட வராமல் இருந்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சசிதரூர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று முறையிட்டுள்ளார்.

Tags : Vice President ,Venkaiah ,Parliament , States Council, MP, Vice President, Venkaiah Warning
× RELATED திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை...