×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் நகை பணம் அபேஸ்: மூதாட்டிக்கு வலை

சென்னை: திருவொற்றியூர் கிருபை நகரை சேர்ந்தவர் சாந்தி (43). இவரது மகள் ஷீலா பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரத்தம் தேவை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஷீலா தனது தாலி செயின், கம்மல் என 3 சவரன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை தனது தாய் சாந்தியிடம் கொடுத்துள்ளார்.  இதை நோட்டமிட்ட 60 வயது மூதாட்டி, சாந்தியிடம், தனது மகளும் அறுவை சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவளுக்கும்  ரத்தம் தேவைப்படுகிறது.

வாருங்கள் இருவரும் ரத்த வங்கிக்கு செல்வோம், என ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும், ‘நகை, பணத்தோடு உள்ளே செல்லக்கூடாது. உங்களிடம் நகை, பணம் ஏதும் இருந்தால் என்னிடம் கொடுத்துவிட்டு சென்று ரத்தம் வாங்கிவிட்டு வாருங்கள். பிறகு நான் செல்கிறேன்,’ என்று மூதாட்டி கூறியுள்ளார். இதை நம்பிய சாந்தி, தன்னிடம் இருந்த நகை, பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு, மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் ரத்தம் வழங்க முடியாது, என அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சாந்தி வெளியே வந்து பார்த்தபோது நகை, பணத்துடன் மூதாட்டி மாயமானது தெரியவந்தது. பின்னர், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை  போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Stanley Government Hospital , Stanley Government Hospital, jewelry, money, grandmother
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு