எல்லைக்குள் அடுத்தடுத்து பறந்து வருவதால் உஷார்; ஜம்முவில் நேற்றிரவு பறந்த 3 பாக். ட்ரோன்கள்: பாதுகாப்பு படை சுட்டதால் மீண்டும் திரும்பின

ஜம்மு: ஜம்மு எல்லையில் நேற்றிரவு 3 ட்ரோன்கள் பறந்த நிலையில், அவற்றை நோக்கி பாதுகாப்பு படையினர் சுட்டதில் அவை பாகிஸ்தானை நோக்கிச் திரும்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்றிரவு 8.30 மணியளவில் சந்தேகத்துக்குரிய ட்ரோன்கள் பறந்தன. கிராம மக்களின் மூலம் தகவலறிந்த பாதுகாப்பு படையினர், பாரி - பிராமண், சிலாத்யா மற்றும் கக்வால் பகுதிகளில் பறந்த 3 ட்ரோன்களை அடையாளங் கண்டனர்.

இவற்றில் சிலாத்யா பகுதியில் பறந்த ட்ரோனை நோக்கி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டனர். அந்த ட்ரோன், பாகிஸ்தானை நோக்கி மீண்டும் பறந்து சென்றது. மற்ற இரண்டு ட்ரோன்களும் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் பாரி பிராமண், கக்வால் பகுதியில் சிறிது நேரம் பறந்துவிட்டு, மீண்டும் மறைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்ற பாதுகாப்பு படையினர் இணைந்து, ட்ரோன்கள் வந்து செல்வதையும், அவற்றை முறியடிப்பது குறித்தும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, கஞ்சக் பகுதியில் சுற்றித் திரிந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அதில் இருந்து ஐந்து கிலோகிராம் ஐஇடி வெடிபொருட்களை மீட்டனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஆறு சக்கரங்களைக் கொண்டிருந்தது. ட்ரோனில்  ஜிபிஎஸ் மற்றும் விமான கட்டுப்பாட்டு சாதனங்கள் இருந்தன. இந்த ட்ரோன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டது என்பது தெரியவந்தது. அதற்கு முன்னதாக ஜம்மு விமானப்படை ஏவுதளத்தில் ட்ரோன் தாக்குதல் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு (சுதந்திர தினம்) முன்னர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மூலம் ஜம்முவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, மக்கள் நெரிசலான பகுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: