பீகாரில் பைக்கில் சென்ற மேயர் சுட்டுக் கொலை: பாஜக எம்எல்ஏ மருமகன் உள்ளிட்ட 12 பேர் கைது

கதிஹார்: பீகாரில் பைக்கில் சென்ற மேயரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏவின் மருமகன் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பீகார் மாநிலம் கதிஹார் மாநகராட்சி மேயர் சிவராஜ் பஸ்வான் (38), நேற்றிரவு வெளியூர் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நகர காவல் நிலையத்தின் அருகே உள்ள சந்தோஷி சவுக் ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், மேயர் சிவராஜ் பஸ்வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

மார்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் சிவராஜ் பஸ்வான் சரிந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல், அப்பகுதியில் தப்பி ஓடிவிட்டது. அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சரிந்த சிவராஜ் பஸ்வானை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேயர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு கூடினர். இதனால், அசாதாரண சூழல் ஏற்பட்டது.

திடீரென சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார், நிலைமையை கட்டுக் கொண்டுவந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ரா கூறுகையில், ‘மேயர் சிவராஜ் பஸ்வான், ரியல் எஸ்டேஸ் தொழில் செய்து வந்துள்ளார். அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ மேயர் கொலை வழக்கில், பெயரிடப்பட்ட நான்கு  குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

பாஜக எம்எல்ஏ கவிதா பஸ்வானின் மருமகன் உட்பட 12 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேயரின்  உடல் பிரேத பரிசோதனை முடித்து, நள்ளிரவிற்கு பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது குற்றவாளிகள் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Related Stories:

>