பொள்ளாச்சி சந்தையில் 3 மாதத்துக்கு பிறகு ஆட்டுத்தோல் ஏலம் துவங்கியது-ஒரு தோல் ரூ.30ஆக சரிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தையில், மூன்று மாதத்திற்கு பிறகு ஆட்டுத்தோல் ஏலம் நேற்று நடைபெற்றது. ஆனால் விற்பனை மந்தத்தால் ஒருத்தோல் ரூ.30ஆக சரிந்துள்ளது.

 பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வாரத்தில் வியாழக்கிழமைதோறும் ஆட்டுத்தோல் ஏலம் நடைபெறும். இங்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மட்டுமின்றி உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் பகுதியிலிருந்தும் கொண்டுவரப்படும் செம்புளி, வெள்ளாட்டு தோல் ஏலம் மூலம் விற்பனையாகிறது. இதனை வாங்கும் வியாபாரிகள் பெரும்பாலும், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 சுமார் 8ஆண்டுகளுகக்கு முன்பு வரை, வாரந்தோறும் நடைபெற்ற சந்தை நாளின்போது சுமார் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல்கள் கொண்டுவரப்பட்டது.  அந்நேரத்தில் வெளி நாடுகளுக்கு தோல் சம்பந்தமான பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பால், அதற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. இதனால், ஒரு ஆட்டுத்தோல் ரூ.220 முதல் 250வரை விற்பனையானது. இதற்காக ஒரு நாள் முன்பாகவே பல்வேறு இடங்களிலிருந்து  ஆட்டுத்தோல் கொண்டுவரப்பட்டு தரம் பிரித்து அடுக்கி வைக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல ஆட்டுத்தோல் வரத்து குறைய துவங்கியது.  

 இந்த நிலையில் 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தைக்கு ஆட்டுத்தோல் வரத்து நின்றது. கடந்த ஆண்டு ஒரு ஆட்டுத்தோல் ரூ.125ஆக இருந்தது.  இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக, தோல் சந்தை மூடப்பட்டது.

 தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் நேற்று முதல் சந்தை திறக்கப்பட்டு நேற்று முதல் ஆட்டுதோல் விற்பனை மீண்டும் துவங்கியது. சுமார் 300க்கும் குறைவான ஆட்டுத்தோல்களே வரபெற்றாலும், வெளியூர் வியாபாரிகள் இல்லாததால், மிகவும் குறைவான விலைக்கு ஏலம்போனது. இதில், செம்புளி மற்றும் வெள்ளாட்டுத்தோல் ஒன்று ரூ.25 முதல் அதிகபட்சமாக ரூ.30க்கே ஏலம் போனது.

ஆட்டுத்தோல் விலை மிகவும் குறைவால், அதனை சந்தைக்கு கொண்டு வந்தவர்களுக்கு போதிய விலை கிடைக்காமல் வேதனையடைந்தனர். வரும் மாதங்களில், வெளி நாடுகளுக்கு தோல் சம்பந்தமான பொருட்கள் ஏற்றுமதி இருந்தால் மட்டுமே, ஆட்டுத்தோல் விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>