×

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சீரிய பணி தொடர வாழ்த்து: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்..!

சென்னை: தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில், 30.7.2021, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :  

தீர்மானம் : 1

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் பொறுப்பேற்றது முதற்கொண்டு நபர் சார்ந்த அரசியலிலிருந்து விலகி, கொள்கை சார்ந்த அரசியலை நோக்கி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பயணித்து வருகிறது. நீண்ட, நெடிய அரசியல் அனுபவமிக்கவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விளங்குவதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், எழுச்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தமிழக சுற்றுப் பயணத்தில் மேற்கொண்ட பரப்புரையின் மூலமாகவும் மக்களவை தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

மொத்தம் போட்டியிட்ட இடங்களின் அடிப்படையில் மக்களவை தேர்தலில் 90 சதவிகிதமும், சட்டமன்றத் தேர்தலில் 72 சதவிகிதமும் வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். இதன்மூலம் தமிழக அரசியலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இத்தகைய சாதனைகளைப் பெறுவதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களையும், அவருக்குத் துணையாக நின்ற தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்களையும், மாநில நிர்வாகிகளையும், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்களையும், அயராது ஓய்வின்றி உழைத்து வெற்றிக்கு அடித்தளமிட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்களையும் இக்கூட்டம் நெஞ்சாரப் பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.

தற்போது இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிற தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படுகிற முடிவுகளை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் சபதமாக ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமைமிக்க இயக்கமாக மாற்ற நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இத்தகைய கடுமையான உழைப்பின் மூலமே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வலிமைமிக்க இயக்கமாக மாறுவதற்குத் துணை நிற்கும் என்பதை இத்தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 2

தமிழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 3 மாதங்களை நிறைவு செய்யவிருக்கிறது. நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், கொரோனாவை ஒரே மாதத்தில் கட்டுப்படுத்தியது, கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கியது, வெளிப்படையான நிர்வாகம், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவை மக்களைக் கவர்ந்துள்ளன. இதனை தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களும் எதிர்த்து வாக்களித்தவர்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறந்த ஆட்சி தந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சியின் சீரிய பணி தொடர வாழ்த்துகிறோம்.


தீர்மானம் : 3

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவினாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் பலமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.610.50 ஆக இருந்ததை ரூ.240 விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 850-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன் மக்களுக்கு சென்றடையாமல் கலால் வரியை பலமுறை உயர்த்தி, 7 ஆண்டுகளில் 24 லட்சம் கோடி ரூபாய் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது.

கடந்த 6 ஆண்டுகளில் 300 சதவிகிதம் கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்திய மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக மக்களைக் கவருகிற வகையில் விரிவான போராட்டங்களை நடத்திய காங்கிரஸ் கட்சியினரை இக்கூட்டம் பாராட்டுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை இக்கூட்டம் வலியுறுத்திக் கூறுகிறது.

தீர்மானம் : 4

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் நற்பெயரைச் சிதைக்கின்ற வகையிலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகவும் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினரே பொறுப்பற்ற முறையில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். எந்த அரசியல் கட்சியிலும் காணாத அநாகரீகப் போக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. காங்கிரஸ் தலைவர்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தி கருத்துகளைப் பதிவு செய்கிற ஆரோக்கியமற்ற போக்கை இனியும் அனுமதிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மீது சமூக ஊடகங்களில் இழிவாகப் பதிவு செய்பவர்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அதைத் தவிர, பொறுப்பில் இருப்பவர்கள் எவரேனும் காங்கிரஸ் தலைவர்கள் மீது இழிவுபடுத்துகிற வகையில் பதிவுகள் செய்வார்களேயானால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. பாரம்பரியமிக்க, வரலாற்றுப் பெருமையுள்ள காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை பொதுமக்கள் மத்தியில் ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்துபவர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு இக்கூட்டம் முழு அதிகாரம் அளிக்கிறது.

தீர்மானம் : 5

மத்திய பா.ஜ.க. அரசின் தவறான தடுப்பூசி கொள்கையினால் 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தடுப்பூசி போடுகிற காலதாமதத்தினால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமும், பீதியும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மத்திய அரசின் இலக்கின்படி, இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 94 கோடி. இவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட 188 கோடி தடுப்பூசிகள் தேவை. ஆனால் கடந்த ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின்படி, தற்போது ஒரு நாளில் சராசரியாக 45 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி இதுவரை 45 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

9.8 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது, மொத்த மக்கள் தொகையில் 7.2 சதவிகிதத்தினருக்கு மட்டும் தான் இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது.  இந்த வேகத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்டால் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 116 கோடி டோஸ்கள் தடுப்பூசி தான் போட முடியும். இதன்மூலம் 72 கோடி டோஸ் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பை பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வையோடு எதிர்கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், கடந்த 15 மாதங்களாக மக்களை வாட்டி வதைத்து வருகிற கொரோனாவினால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

அறிவியல் துறையில் அற்புதங்கள் நிகழ்த்திய வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற இந்தியா, ஒரே ஒரு தடுப்பூசி கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது குறித்து அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்தியை நம்பி அவர்கள் விதிக்கிற நிபந்தனைகளை ஏற்றுச் செயல்பட வேண்டிய அவலநிலை மோடி அரசுக்கு ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இத்தகைய அவலநிலையில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அமைந்திருக்கிறது. இந்த கொரோனா பேரழிவிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பிரதமர் மோடி, தமது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் இதுவரை ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளுக்கும், எதிர்காலத்தில் ஏற்படப் போகிற பாதிப்புகளுக்கும் பிரதமர் மோடி முழு பொறுப்பேற்க வேண்டுமென இக்கூட்டம் குற்றம்சாட்டுகிறது.

தீர்மானம் : 6

பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பா.ஜ.க. தான் பொறுப்பு. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகாசஸ் எனும் உளவு பார்க்கும் மென்பொருளை அரசாங்கங்களுக்கு மட்டும் தான் வழங்கும். அந்த வகையில் இந்திய அரசுக்கு உளவு பார்க்கும் மென்பொருள் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்துப் பேச பிரதமர் மோடி மறுக்கிறார். இது தவிர, மக்கள் விரோத பிரச்சினைகள் பற்றிப் பேச எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படவில்லை.  விவாதத்துக்குத் தயார் என்றால் நாளைக்கே நாடாளுமன்றம் இயங்கும். ஜனநாயக செயல்பாடுகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பிரதமர் மோடியின் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் : 7

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19, 20, 21 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றை முடக்க இந்தியா முழுவதும் உபா எனும் சட்டவிரோத செயல்பாடுகள் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. மனித உரிமைப் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், உரிமைக்காகப் போராடிய சாமானிய மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது உபா  சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்துள்ளனர். உபா சட்டத்தை ரத்து செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்து வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உபா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும், உபா சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை எதிர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 8

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில், தமிழகத்தைப் பாரபட்சமாக நடத்துவதை மத்திய பா.ஜ.க. அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் முதல் தடுப்பூசி வரை போராடிப் பெறும் சூழலே உள்ளது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 2021 மதிப்பீட்டின்படி 7.88 கோடி. ஜூலை 25 நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 ஆகும். இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 6.48 கோடி. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேர். ஆனால், தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770 பேர். இந்த இரண்டு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கு புரியும். நாட்டுக்கே பொதுவான ஒரு  பிரதமர், பாரபட்சம் காட்டுவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் : 9

கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 65 பதிப்புகளை நடத்தி வருகிற பாஸ்கர் குழுமம் வருமான வரி சோதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் என்கிற நாளேடுகளை இந்த குழுமம் நடத்துகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா தொற்று, இறப்பு  மூடி மறைக்கப்படுவது குறித்தும் தடுப்பூசி தட்டுப்பாடு பற்றியும் ஆதாரப்பூர்வமாக செய்திகள் இந்த குழுமத்தின் பதிப்புகளில் வெளியிடப்பட்டன. அதேபோல, கொரோனா தொற்றில் இறந்தவர்களின் சடலங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்படுவதாகவும் பாஸ்கர் குழுமம் செய்தி வெளியிட்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆட்சியாளர்கள் பாஸ்கர் குழுமத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி அதன் குரல்வளையை நெறிக்க முயற்சி செய்கிறார்கள்.  பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறையை ஏவிவிடுகிற பிரதமர் மோடியின் செயலை, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்த்துப் போராட முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 10

கடல் தோன்றிய காலத்திலிருந்தே சுதந்திரமாக மீன் பிடித்து வந்த மீனவர்களை நசுக்கும் வகையில், இந்திய கடல் மீன்வள சட்ட மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், 10 குதிரைத்திறன் கொண்ட பைபர் படகுகளைப் பன்னாட்டுக் கப்பல்களாக கருதி, மீன் பிடிக்கச் செல்லும் போது ஒவ்வொரு முறையும் பதிவு செய்யச் சொல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களிடமே மீன் பிடிக்கக் கட்டணம் வசூலிப்பது உலகில் எங்கும் இல்லாத கொடுமை. 12 கி.மீ தொலைவுக்கு அப்பால் சென்று மீன் பிடித்தால் அபராதம், சிறை என்பது எல்லாம் எவ்வளவு காட்டுமிராண்டித் தனம். மீனவர்களைக் கடலிலிருந்து வெளியேற்றி, அதனைச் சுரங்கம் அமைக்க, கனிம வளங்கள் எடுக்க தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதே கடல் மீன்வள சட்ட மசோதாவின் பிரதான நோக்கம். மீனவர்களுக்கு எதிரான இந்த கறுப்புச் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Tags : Stalin , 10 resolutions passed at the consultative meeting of the Congress Committee held at Sathyamoorthy Bhavan ..!
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...