ஒரத்தநாடு ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டபணி-கலெக்டர் ஆய்வு

தஞ்சை : ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேலஉளூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நவநீதகிருஷ்ணன் என்பவர் குறுவை சாகுபடி செய்வதற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் நெல் விதைகள், ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்பதை கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் சென்ற ஆண்டு மகசூலை கேட்ட கலெக்டர் இந்த ஆண்டும் அதற்கு குறைவில்லாமல் கூடுதல் மகசூல் பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலஉளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் உரக்கிடங்கை ஆய்வு செய்த அவர் ரசாயன உரம் இருப்பும் குறித்தும் அதற்குரிய பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி ரசாயன உரங்கள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் அங்குள்ள நியாய விலைக் கடையை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்க கூடிய அரிசியின் தரத்தையும், பதிவேட்டில் உள்ள இருப்பு முழுமையாக உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.மேலஉளூர் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டார். தொடர்ந்து ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் காமராஜர் காலனியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் 375 வீடுகளுக்கு புதிய குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காட்டுக்குறிச்சி ஊராட்சியில் பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் மேலஉளூர் காசவளநாடு, கோவிலூர் இடையே சாலை பணி 5.8 கி.மீ.க்கு ரூ.4.04 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டார். மேலும் பாசன வாய்க்கால் பாலப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என அளந்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மேலஉளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட அவர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாய்சேய் நல அட்டையை பார்வையிட்டு அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து முறையாக அலுவலர்கள் வீடுகளுக்கு வந்து கண்காணிக்கிறார்களா? என கேட்டறிந்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த சோகை மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தடுப்பூசி பதிவேடு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருந்து கிடங்கில் மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தொற்றுநோய்க்கு தேவையான தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள மருத்துவர்களை அறிவுறுத்தினார்.

ஒரத்தநாடு ஒன்றியகுழு தலைவர் பார்வதி சிவசங்கர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், வட்டார மருத்துவர் இந்திரா, வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் சீமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரகுநாதன், உதவி பொறியாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கர், சீதாலட்சுமி ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>