×

சர்வதேச புலிகள் தினத்தில் சொந்த காட்டுக்குள் சென்ற ‘மங்களா’ புலிக்குட்டி

கூடலூர் : கேரள வனத்துறை பராமரிப்பில் வளர்ந்த புலிக்குட்டி ‘மங்களா’ சர்வதேச புலிகள் தினமான நேற்று பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் விடப்பட்டது.
கேரளாவின் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 925 கிமீ பரப்பளவில் உள்ளது பெரியாறு புலிகள் காப்பகம். கடந்தாண்டு நவ.21ம் தேதி, இங்குள்ள மங்களதேவி வனப்பகுதியில் தேக்கடி வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது, தாயின்றி உயிருக்கு போராடிய சுமார் 60 நாள் வயதுடைய பெண் புலிக்குட்டி ஒன்றை மீட்டு, தேக்கடி வனவிலங்கு மருத்துவ மனையில் சிகிச்சையளித்து, தங்கள் பராமரிப்பில் வளர்த்து வந்தனர். மங்களதேவி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால் இந்த புலிக்குட்டிக்கு ‘மங்களா’ என பெயரிட்டனர். கடந்த ஜனவரி முதல் கண்ணகி கோவில் அருகே உள்ள கரடிக்கவலை வனப்பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை சுற்றி வேலி அமைத்து, இந்த புலிக்குட்டிக்கு, சிறு விலங்குகளை சுயமாக வேட்டையாட கேரள வனத்துறை பயிற்சியளித்தது.

இந்நிலையில் சர்வதேச புலிகள் தினமான நேற்று, புலிகள் சரணாலய இணை இயக்குநர் சுனில்பாபு, உதவி வனத்துறை இயக்குநர் மனுசத்யன், கால்நடை மருத்துவர்கள் ஷ்யாம் சந்திரன், நிஷா, சிபி தலைமையில் வனத்துறையினர் ‘மங்களா’ புலிக்குட்டியை அதன் சொந்த காடான பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் விட்டனர்.

இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், இந்த புலிக்குட்டி இருந்த வனப்பகுதியில் சிறிய உயிரினங்களை விட்டு வேட்டையாட பயிற்சியளித்தோம். இது வெற்றிகரமாக முடிந்ததால் வனத்தில் விட முடிவு செய்தோம். மீட்கப்பட்டபோது 2.8 கிலோ எடையிருந்த புலிக்குட்டி, தற்போது 40 கிலோ எடையுடன் உள்ளது. இன்று (நேற்று) சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தேக்கடி ரேஞ்சில், வனவிலங்கு நல்வாழ்வு மற்றும் நோய்தடுப்பு பராமரிப்பு பிரிவு அருகே உள்ள வனப்பகுதியில் ‘மங்களா’ விடப்பட்டது, என்றார்.

Tags : International Tigers Day , Kudalur: The tiger cub 'Mangala', which was raised under the care of the Kerala Forest Department, entered the Periyar Tiger Reserve yesterday, the International Tiger Day.
× RELATED சிவன் கோயில் சுவரில் வெடிகுண்டு வீச்சு