×

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேவையில்லை : தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தற்போது பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா 2வது ஆலையின் ஆரம்பத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது, தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருவதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த இடைக்கால வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பதாகவும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முழுவதையும் ஒன்றிய அரசிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த அனுமதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் நேற்று புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டித்து வழங்க வேண்டும்,’ என  கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி, உச்சநீதிமன்றம் தந்த 3 மாத கால அனுமதி நாளையுடன் முடிவடைகிறது.  ஆகவே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும், என்று வாதம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதி முடியாது,என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதுவரை தற்போது செய்யப்படும் உற்பத்தி தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : Government of Tamil Nadu , ஸ்டெர்லைட் ஆலை
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...