×

ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் கொரோனா ெதாற்று ஒழிய 1008 பால்குட அபிஷேகம்

பூந்தமல்லி: உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா தொற்று ஒழிய மழை வேண்டி, பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மிகவும் பழமையான, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன், சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகாலட்சுமி, கருமாரி, சரஸ்வதி, கம்பாநதி, கர்ப்பிணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 7ம் நாளான நேற்று 1008 பால்குடம் அபிஷேகம் நடந்தது.

இதில், காட்டுப்பாக்கம் பொன்னி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 1008 பால்குடங்களை தலையில் சுமந்தபடி மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் ஊர்வலமாக சென்று, கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நாடு முழுவதும் மழை பொழிந்து செழிப்படையவும், அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று ஒழியவும் இந்த சிறப்பு பாலாபிஷேகம் அம்மனுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம் மற்றும் குடும்பத்தினர், விழா குழுவினர் செய்தனர். இதில் கலந்து கொண்ட,  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Uthukkattu Ellayamman temple , Uthukkattu Ellayamman Temple, Corona, Balkuda Abhishekam
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...