தடையை மீறி விற்பனை ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 3 கடைகளுக்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் நகராட்சி நகர் நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் இக்பால், சீனிவாசன், துப்புரவு மேற்பார்வையாளர் கணேசன் ஆகியோர் காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 3 மொத்த வியாபார கடைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 2 கடைகளுக்கு தலா ரூ.5000, ஒரு கடைக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories:

More