×

திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2012ம் ஆண்டு முதல்  2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.  

அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ ஆசிரியர் மீது  12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்’ வார இதழ் ஆசிரியர்  மீது  9 வழக்குகளும், ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர் மீது  11 வழக்குகளும், ‘நக்கீரன்’ ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், ‘தினகரன்’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன,

மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’ தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திமுக தேர்தல் அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (29ம் தேதி) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK elections ,Tamil Nadu government , 90 cases against journalists withdrawn as promised in DMK elections: Tamil Nadu government takes action
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...