×

உள்ளாட்சி டெண்டர்களில் ஊழலை தவிர்க்க விதிகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்கு டெண்டர் கோரும்போது ஊழல், முறைகேடு புகார்களை தவிர்க்க டெண்டர் கோருவது, ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிக்கான டெண்டர் ஒதுக்கீட்டை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், டெண்டர் பெற்ற நிறுவனம் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை. மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரும் போது ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. டெண்டர் வெளிப்படைத்தன்மை, சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த டெண்டரில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின், டெண்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் கோர அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய டெண்டர் கோர அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் கோரும் போது ஊழல், முறைகேடு புகார்களை தவிர்க்க டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். டெண்டர் கோருவது, டெண்டர் ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தல் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags : ICC ,Government of Tamil Nadu , Rules should be laid down to avoid corruption in local tenders: ICC instruction to the Government of Tamil Nadu
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...