போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை சஸ்பெண்ட்: முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தைரியமேரி நெஞ்சினி. இவர் அங்குள்ள அரசு நிதிஉதவி பெறும் சிஎஸ்ஐ பிரைமரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கல்விச்சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது அவரது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போலியாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகம் அவரது சான்றிதழை தீவிரமாக ஆய்வு செய்தது. இதில் 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த தைரியமேரி நெஞ்சினி, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக, மதிப்பெண் பட்டியலை திருத்தியுள்ளார்.

அதன்படி அதிக மதிப்பெண்களை பதிவிட்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ் தயாரித்துள்ளார். பின்னர் அந்த சான்றிதழ் மூலம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் அரசு நிதியுதவி பள்ளியில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்தது.  இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாருக்கு, பள்ளி நிர்வாகத்தினர் கடந்த 27ம் தேதி  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், ஆசிரியை தைரியமேரி நெஞ்சினி மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார். அதில் மதிப்பெண் பட்டியலை திருத்தி போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியை தைரியமேரி நெஞ்சினியை நேற்று சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Related Stories:

>