×

அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் 3வது அலை தொடங்கியதா? ஒன்றிய நிபுணர்கள் குழு ஆய்வு

புதுடெல்லி: நாட்டின் தினசரி பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், ஆலோசனை வழங்கவும் தேசிய நோய்  கட்டுப்பாடு மைய இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை  ஒன்றிய அரசு அனுப்பி வைத்துள்ளது. நாடு முழுவதும் பரவிய கொரோனா 2வது அலையால், தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் எகிறியது. பலி எண்ணிக்கை 6000க்கும் மேல் பதிவானது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.

ல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், இதுவரை இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 30,000க்கும் கீழ் குறைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் 10,000க்கும் மேல் அதிகரித்து வருவது, 3வது அலைக்கான அறிகுறியா என சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பாதிப்புகளில் 50 சதவீதம், கேரளாவில் பதிவாகி இருந்தது.

கேரளாவில் 1.54 லட்சம் பேர் தொற்றால் பாதித்து தற்போது சிகிச்சை பெற்று  வருகின்றனர். இது, நாடு முழுவதும்  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 37.1 சதவீதமாகும். குறிப்பாக, 6 மாவட்டங்களில் தொற்று பரவல் மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது, ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வந்த போதிலும், தொற்று பாதிப்பும் பலியும் தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. நேற்றும் தொடர்ந்து 2வது நாளாக, இம்மாநிலத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்ைக 22 ஆயிரத்தை தாண்டியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மும்மடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவலின் அடிப்படையில் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நோய் பரவல் குறைவாக உள்ள ‘ஏ’ பகுதியில் மட்டுமே அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற 3 பகுதிகளிலும் நிபந்தனைகளுடன் மட்டுமே கடைகளை திறக்க முடியும். ‘டி’ பிரிவில் உள்ள பகுதியில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்த பகுதியில் வேறு எந்த கடைகளும் திறக்க முடியாது. இதனால், இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடந்த சில மாதங்களாகவே சனி, ஞாயிற்று ஆகிய 2 நாளும் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 2 நாட்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த வாரமும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாளும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் அதிகரிக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், ஆலோசனை வழங்கவும் தேசிய நோய்  கட்டுப்பாடு மைய இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை  ஒன்றிய அரசு அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு சென்று இக்குழு ஆய்வு நடத்த உள்ளது.  மேலும், அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான  ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். பின்னர், ஒன்றிய அரசுக்கு பாதிப்பு குறித்து அறிக்கை அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

* 2வது நாளாக பாதிப்பு உயர்வு
ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 28 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 640 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து  662 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 840ஆக உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. 30,000 கீழ் சரிந்த தினசரி பாதிப்பு, கடந்த 2 நாட்களாக 43,000ஐ தாண்டி உள்ளது.

* அரசு தடை போட்டாலும் ஆகஸ்ட் 9ல் கடைகள் திறப்பு: வியாபாரிகள் அறிவிப்பு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி வியாபாரிகள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டது. இது பற்றி கேரள வியாபாரிகள் சங்க கூட்டம் திருச்சூரில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சங்கத்தின் தலைவர் நசீருதின் கூறுகையில், ‘‘கேரளாவில் கடைகளை திறக்க முடியாததால் விரக்தி அடைந்த பல வியாபாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகவே, கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், இன்று வரை எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே, ஆகஸ்ட் 9ம் ேததி முதல் அரசு அனுமதித்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து பகுதிகளிலும் கடைகளை திறக்க முடிவு செய்து உள்ளோம். இந்த நாளில் கடைகளை மூடவோ, வியாபாரிகளை கைது செய்யவோ முயற்சித்தால் தலைமை செயலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்து இருக்கிறோம்,’’ என்றார்.


Tags : Kerala , Has the 3rd wave of the rapidly spreading corona virus infection started in Kerala? Review by a panel of Union experts
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...