நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் டன் கணக்கில் வீணாகும் மண்: வருமானமாக மாற்ற ஆணையர் முன் வருவாரா?

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க, சாலைகளை சீரமைக்க தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து கிடைக்கும் மண் வீணாக்கப்படுகிறது. இந்த மண்ணை சேகரித்து வைத்து ஏலம் விட்டு வருமானமாக மாற்ற மாநகராட்சி ஆணையர் முன் வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் புதிய சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே போடப்பட்ட சாலைகள் அகற்றப்படுவது இல்லை. பழைய சாலையின் மீதே மீண்டும் தார் கலவை ஊற்றி அமைக்கப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் சாலைகள் 3 முதல் 5 அடி உயரம் வரை உயர்ந்து விட்டன. ஆகவே பழைய கட்டிடங்கள் சாலையில் இருந்து பல அடி பள்ளத்தில் உள்ளன. இதனால் மழை காலங்களில் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகின்றன.

இதேபோல் தெருக்களை கடந்து செல்லும் சாக்கடை தண்ணீர் தேங்கும் நிலை பல பகுதிகளில் உருவாகி உள்ளன. இப்படி அவசர கதியில்  அமைக்கப்படுகிற சாலைகளும் தரமற்றதாகவே உள்ளன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தவரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில் சாலைகளை சீரமைக்கும் போது, ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலைகளை தோண்டி, கற்கள், மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் புதிதாக மண், கற்கள் கொட்டி சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது இந்த உத்தரவை பின்பற்றி நாகர்கோவில் மாநகராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குமரியில் தற்போது வீட்டு மனைகள் உள்பட பல்வேறு தேவைக்களுக்கு வண்டல் மண் மற்றும் கட்டுமான இடிபாடுகளை விலைக்கு வாங்கி வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையராக சரவணகுமார் இருந்த போது, கலைவாணர் அரங்கம் உள்பட பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது பணம் செலவு செய்து இடித்து அகற்றுவற்கு பதிலாக, கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு அதன் கழிவுகளை எடுத்துக்கொள்ள, சம்பந்தப்பட்ட கட்டிடங்களை பொறுத்து லட்சக்கணக்கில் டெண்டர் விட நடவடிக்கை எடுத்தார். அதன் மூலம் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இதற்காக தோண்டப்பட்ட சாலை கழிவுகள், இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை நாகர்கோவில் நாகராஜா கோயில் திடல், அவிட்டம் திருநாள் காப்பக மைதானம் போன்ற இடங்களில் கொட்டி வைத்து ஏலம் விடப்பட்டது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தோண்டி எடுக்கப்படுகிற பல டன் சாலை மண் கழிவுகள் மாநகருக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கற்கள் கலந்த மண்ணை இதேபோல் அவிட்டம் காப்பக மைதானத்தில் கொட்டி வைத்து எடைக்கு ஏற்ப ஏலம் விட்டால், ஆண்டிற்கு கோடிக்கணக்கில் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அகில இந்திய மக்கள் நலக்கழக மாவட்ட தலைவர் வக்கீல் சதீஷ் கூறியது: பழைய கால கட்டிடங்கள், வீடுகள் போன்றவற்றை இடித்து, அகற்றும்போது, அதிலுள்ள கதவுகள், நிலைகள் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் கட்டுமான இடிபாடு கழிவுகளும், வீட்டுமனைகள் நிரப்ப தற்போது நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் 128 கட்டிங்களை இடித்து அகற்ற ரூ. 19 லட்சத்து 5 ஆயிரத்திற்கு ஏலம் போய் உள்ளது. மாநகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்படும் வளம் மிகுந்த பல லட்சம் மதிப்புள்ள வண்டல் மண்ணு வருவாய் இன்றி வெளியே கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே மாநகராட்சிக்கு வருவாயை ஏற்படுத்தும் விதத்தில் இது தொடர்பாக ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

More