×

சத்தியமங்கலம் அருகே தமிழக- கர்நாடக தேசிய நெடுஞ்சாலையை சாவகாசமாக கடந்த காட்டுயானை கூட்டம்: வாகன ஓட்டுநர்கள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம்- கர்நாடகம் இருமாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோரம் தீவனம் தின்றுகொண்டிருந்த 3 காட்டு யானைகள், சாலையை கடந்து செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தன. அப்போது சாலையில் வாகனங்கள் சென்றதால் சிறிதுநேரம் காத்திருந்த காட்டு யானைகள் லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் சென்றபின் சாலையில் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்துவிட்டு மெதுவாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதை பார்த்த சரக்கு வாகன ஓட்டுநர்கள், யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் புறப்பட்டு சென்றனர்.  தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை மித வேகத்தில் இயக்குமாறு வாகன ஓட்டுநர்களை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : TN - Karnataka National Highway ,Satyimangalam , Satyamangalam, National Highway, Wild Elephant
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை