×

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆக. 28ல் பெருவிழா கொடியேற்றம்: செப். 7ம் தேதி தேர் பவனி: ஏற்பாடுகள் தீவிரம்

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்துக்கு வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கால் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கடந்த 5ம் தேதி வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தினம்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் இந்தாண்டு ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி மாலை நடக்கிறது. செப்டம்பர் 7ம் தேர்பவனி நடக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. கொடியேற்றம் நடந்தது முதல் வேளாங்கண்ணி பேராலயத்தில் தினம்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனித்தனியே கூட்டு திருப்பலி நடைபெறும். கடந்தாண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த பெருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் பேராலய பெருவிழாவுக்கு கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் பேராயல நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு தெரிவிக்கும்.

பேராலய ஆண்டு பெருவிழா நடப்பதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. தற்போது பேராலயத்தில் சுற்றுச்சுவர்கள் மற்றும் இரும்பிலான கதவுகளில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மற்ற முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

Tags : Chariot Bhavani , Velankanni, flag hoisting ceremony
× RELATED புளியம்பட்டி திருத்தல பெருவிழாவில் புனித அந்தோனியார் தேர் பவனி