×

3 மாதங்களுக்கு பிறகு பொள்ளாச்சி சந்தையில் ஆட்டுதோல் ஏலம் துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில், 3 மாதத்திற்கு பின்னர் ஆட்டுத்தோல் ஏலம் இன்று துவங்கியது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரம்தோறும் வியாழக்கிழமை ஆட்டுத்தோல் ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும்  ஆட்டு தோல் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தோலை வாங்கும் வியாபாரிகள் திண்டுக்கல், ஈரோடு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

8 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாரந்தோறும் சந்தை நடைபெற்றது. அப்போது தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஒரு ஆட்டுத்தோல் ரூ.220 முதல் 250 வரை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. ஒருநாள் முன்பாகவே பல்வேறு இடங்களிலிருந்து  ஆட்டுத்தோல் கொண்டுவரப்பட்டு தரம்பிரித்து அடுக்கி வைக்கும் பணி நடைபெறும். நாட்கள் செல்ல செல்ல ஆட்டுத்தோல் வரத்து குறைய தவங்கியது. இருப்பினும், ஆட்டுத்தோல்களை வாங்க, வியாபாரிகள் பலர் தொடர்ந்து சந்தைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தைக்கு ஆட்டுத்தோல் வரத்து மிகவும் குறைவானதுடன், தோல் ஏற்றுமதி போதியளவு இல்லாததால், ஆட்டுத்தோல் வாங்க வரும் வியாபாரிகளின் வருகையும் குறைந்து, விலையும் சரிந்தது. கடந்த ஆண்டு ஒரு ஆட்டுத்தோல் ரு.125ஆகவே இருந்தது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு மேலாக, தோல் சந்தை நடைபெறவில்லை.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் ஆட்டுதோல் விற்பனை மீண்டும் துவங்கியது. 300க்கும் குறைவான ஆட்டுத் தோல்களே ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெளியூர் வியாபாரிகள் இல்லாததால் பலர் ஏலம் கேட்க வராததால் ஆட்டு தோல்கள் குறைவான விலைக்கு ஏலம்போனது.  செம்புளி மற்றும் வெள்ளாட்டுத்தோல் குறைந்தபட்சம் ரூ.25 முதல் அதிகபட்சமாக ரூ.30க்கு விற்பனையானது. ஆட்டுத்தோல் விலை குறைந்து போனதால் உள்ளூர் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.


Tags : Pollachi Market , Pollachi, sheepskin auction
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...