×

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் என்னை ‘பிஹாரி குண்டா’ என்று சொன்னார்!: பாஜக எம்பியின் கதறலுக்கு திரிணாமுல் எம்பி பதிலடி

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், என்னை மூன்று முறை  ‘பிஹாரி குண்டா’ என்று திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா கூறியதாக பாஜக எம்பி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில்  தகவல் மற்றும் தொழில்நுட்ப நிலைக்குழு ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் குறித்து விவாதிக்க குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது, நிலைக்குழு கூட்டங்களை நடத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி, பாஜக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் போது, குழு கூட்டங்களை நடத்த முடியாது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, என்னை மூன்று முறை ‘பிஹாரி குண்டா’ (பீகாரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குண்டர்களை ‘பிஹாரி குண்டா’ என்பார்கள்) என்று அழைத்தார். அவரது பேச்சு, வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது’ என்றார்.

இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்ட டுவிட்டில், ‘அவரது பெயரை (நிஷிகாந்த் துபே) அவரே குறிப்பிட்டதை பார்த்து கொஞ்சம் சிரிப்பு வருகிறது. தகவல் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில், அவரை நான் எப்படி பேசியிருக்க முடியும். உறுப்பினர்களின் வருகை பதிவை அவர் சரிபார்க்கவும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு உறுப்பினர் கூறுகையில், ‘பிஹாரி குண்டா குறித்த விவாதத்திற்கு மத்தியில், உறுப்பினர்களின் கோரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது’ என்றார்.

முன்னதாக, ‘தகவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 32 பேர் கொண்ட நாடாளுமன்ற  நிலைக்குழு இன்று (நேற்று) கூடுகிறது. இதற்காக பட்டியலிடப்பட்ட  நிகழ்ச்சி ‘குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை’ என்ற பெயரில் நடக்கும்’ என்று  மக்களவைத் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக உறுப்பினர்கள் வேண்டுமென்றே புறக்கணித்ததால், திட்டமிட்டபடி நிலைக்குழு கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Bihari Kunda ,Parliamentary Standing Committee ,Trinamool ,BJP , Trinamool MP
× RELATED திரிணாமுல் காங். வேட்பாளர் மஹுவா...