×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு மலர் செடிகள் நடவு பணி துவக்கம்

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்ககான மலர் செடிகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் கோடை சீசனுக்காக தயாராக இருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை துவங்கியதால், கடந்த ஆண்டை போலவே இம்முறையும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

மே மாதம் நடக்க இருந்த கோடை விழா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால், கோடை சீசன் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி முடிவுக்கு வந்தது. நீலகிரியில் இரண்டாவது ஆண்டாக கோடை விழா ரத்து செய்யப்பட்டிருந்தாலும், செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் நடைபெறும் என்ற நம்பிக்கையில் பூங்காக்களை தயார் படுத்தும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் இரண்டாவது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்ய வசதியாக நர்சரியில் நாற்று உற்பத்தி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பூங்காவில் உள்ள பாத்திகளில் நடவு செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

பூங்கா நுழைவுவாயில் பகுதி, இத்தாலியன் கார்டன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வகை பகுதியில் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை டெலியா, இன்கா ேமரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஜினியா, கேலண்டூலா, லூபின், சப்னேரியா, பிகோனியா, ஆஸ்டர், வெர்பினா உள்ளிட்ட 150 ரகங்களில் 2.20 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

இதுதவிர, மலர் அலங்காரத்திற்காக 7 ஆயிரம் தொட்டிகளிலும் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, நல்ல மழை பெய்து வருவதால் செப்டம்பர் மாத துவக்கத்தில் மலர் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ooty Botanical Garden , Ooty,Government Botanical Garden,Botanical Garden
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்