காஷ்மீர், இமாச்சலில் வெள்ளத்தால் 22 பேர் பலி: வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை ராணுவம் தேடுகிறது

காஷ்மீர்: காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 பேரை மீட்கும் பணியில் ராணுவமும், பேரிடர் மேலாண் படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று கிரிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள பூஞ்சார் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளம், வீடுகள் மற்றும் கட்டிடங்களை தரைமட்டமாக்கியத்துடன் 40 பேரை அடித்து சென்றுவிட்டது. இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து இதுவரை 17 பேரை மீட்டுள்ளனர். வெள்ளம் அடித்து சென்ற 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் ரஜூரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜோங்ரி, அஹ்ராத்தி என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட சிறிய மழை கிராமங்கள் தனி தீவுகளாக மாறிவிட்டன. பெரு வெள்ளத்தால் நதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேக வெடிப்பால் இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடுகளாக மாறி இருக்கின்றன. சுரேந்தர் நகரில் உள்ள மாஞ்சி என்ற இடத்தில் மட்டும் அதிகபட்சமாக 105 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இமாச்சலில் இதுவரை 14 பேர் உயிரிழந்துவிட்டனர். 4 பேரை காணவில்லை. கனமழை தொடர்வதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதனிடையே இமாச்சலில் திடீர் திடீரென ஏற்படும் நிலச்சரிவுகளால் உயர் நிலங்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை சற்றும் நிற்காமல் கொட்டி வருவதால் காங்க்ரா, சிர்மார், சிம்லா, மாந்தி, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல குல்லூர், சம்பா, சோலன், கில்லார், காங்க்ரா ஆகிய மாவட்டங்களுக்கும் வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Related Stories:

More