×

ஜார்கண்ட் மாநிலத்தில் பதற்றம்!: நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை.. சிசிடிவி காட்சி வெளியீடு..!!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி ஆட்டோ மோதி உயிரிழந்தார். அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், ஹிராப்பூரில் தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். வெறிசோடி இருந்த சாலையோரம் நடைப்பயிற்சி சென்ற அவர் மீது பின்னால் சென்ற ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

அடையாளம் தெரியாததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உத்தம் ஆனந்த் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இதனிடையே நடைப்பயிற்சிக்கு சென்ற நீதிபதி வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உத்தம் ஆனந்த் இறந்தது தெரியவந்தது. நீதிபதி மரணம் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் சாலையோரம் நடந்துசென்ற நீதிபதி மீது ஆட்டோ வலியே சென்று மோதியத்துடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங் உதவியாளர் ரஞ்ஜீவ் சிங் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமின் கொடுக்க அண்மையில் நீதிபதி உத்தம் ஆனந்த் மறுத்துவிட்டார். சிறையில் உள்ள இருவரும் தாதா அமந்த்சிங் கும்பலை சேர்ந்தவர்கள். எனவே நீதிபதி மரணத்தில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதில் உண்மையை வெளிக்கொண்டு வர சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Jharkhand , Jharkhand, District Judge, Auto, Murder, CCTV footage
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...