ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முத்துநகர் கடற்கரை பூங்கா சீரமைப்பு பணி மந்தம்

தூத்துக்குடி : முத்துநகர் கடற்கரை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இப்பணிகளை துரிதப்படுத்தி விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் 950 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இதில் ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகளில் நடந்து வரும் அனைத்து பணிகளுமே ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக திட்டமிடப்படாமல் பல பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்களை அடைத்து அதன் மீது பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் பூங்கா சீரமைப்பு என்ற பெயரில் கடந்த இரு ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது.

மேலும் அங்கு நடைமேடை மற்றும் நவீன புல்வெளி நீருற்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பணிகள் ஆமை வேகத்தில் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில பூங்காக்கள் நடைபயிற்சிக்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நகரின் முக்கிய பூங்காவாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வந்த, அரசு விழாக்கள் நடத்தப்பட்டு வந்த முத்துநகர் பூங்கா மட்டும் ஸ்மார்ட் சிட்ட திட்ட பணிகளால் மூடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>