×

நெல்லை ரயில்களை பிடிக்க வசதியாக ஏற்பாடு தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு புதிய சாலை

*30 நிமிடங்களில் செல்ல முடியும்

நெல்லை : தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு 30 நிமிடங்களில் பயணிக்கும் வகையில் புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டம் தயாரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுக நகரமாக திகழ்கிறது. இங்கு விமான நிலையம், நான்கு வழிச் சாலைகள் என சாலை, ஆகாய மார்க்கமாக பல்வேறு வசதிகள் இருந்தும் ரயில் வசதிகள் மிகக் குறைவு. தற்போதைய ரயில்வே ஸ்டேஷன் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.

அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி கீழூரில் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வருவதற்கே பெரும் பாடாக உள்ளது.

ஏனெனில் தூத்துக்குடிக்கு ரயில் வரும் முக்கிய இடங்களில் நான்கு ரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளன. இதில் 3ம் கேட்டில் மட்டுமே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்வே கேட்டுகள் ரயில் வரும் போது மூடி திறக்கப்படுவதால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனாலேயே  தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடி - மைசூர் இடையே மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

 இதனால் தூத்துக்குடி நாளுக்கு நாள் வளர்ந்து வந்த போதிலும், போதிய ரயில் வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. இந்நிலையில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வழியாக கடந்து கோவில்பட்டி செல்கின்றன. ஆனால் வாஞ்சி மணியாச்சிக்கு தூத்துக்குடியில் இருந்து குறுகிய தூரத்தில் செல்ல போதிய சாலை வசதி இல்லை.

இதனால் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்ல 1.30 மணி நேரம் ஆகிறது.எனவே தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு செல்ல புதிய சாலை அமைக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து நெல்லையில் கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடத்திய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள சாலை தூத்துக்குடி சிப்காட்டிற்கு நடுவே செல்லும் வழியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள் அதிகம் அமைந்துள்ள சிப்காட் வளாகம் இரண்டாக பிரிந்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே மாற்று வழியில் திட்டத்தை தயாரிக்கலாமா, தூத்துக்குடியில் இருந்து ரயில் செல்லும் வழித் தடத்தை ஒட்டி சாலை அமைக்க முடியுமா என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

விரைவில் இந்த சாலைக்கு புதிய வடிவம் கொடுக்கப்படும். இந்தச் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு 30 நிமிடங்களில் பயணிக்க முடியும் என நம்பப்படுகிறது.


Tags : Thoothukudi ,Maniyachi ,Nellai , Nellai, Thoothukudi, Maniyaachi, New Road, Trains
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...