×

அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை எதிரொலி தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்: வார்டுகளை மறுவரையறை செய்ய உத்தரவு

சென்னை: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையொட்டி, வார்டுகளை மறுவரையறை செய்து விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2016ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். இதுகுறித்த அறிவிப்பு, கடந்த மாதம் நடைபெற்ற கவர்னர் உரையிலும் இடம் பெற்றிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தேர்தலுக்கு முன் வார்டுகளை மறுவரையறை செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பான கையேடுகளை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதில், வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரித்தலுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வார்டுகளை மறுவரையறை செய்து அறிவிப்பு வெளியிட்ட பின்னர், தேர்தலை நடத்துவதற்கு வசதியாக வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட வேண்டும். அதன்படி, ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1000-க்கு மேல் இருந்தால் மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் வாக்குச்சாவடி அமைக்க உரிய முன்மொழிவினை அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BC ,Q. ,Stalin , Officer, Chief MK Stalin, Consulting, Local Elections
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...