×

தமிழக வீரர்கள் ஒலிம்பிக், சர்வதேச அளவில் பதக்கம் பெற கிராமப்புற மாணவர்களை கண்டறிந்து உயர்தரமான பயிற்சி அளிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் அதிகளவில் ஒலிம்பிக், சர்வதேச, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற கிராமப்புற மாணவர்களை கண்டறிந்து உயர்தரமான பயிற்சி அளித்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதி துறை செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டிலும் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமப்புறத்தை சார்ந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, உறைவிடம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்து பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும். தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உலக தரத்திலான பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல், சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையான போட்டிகளுக்கும் உயர்தர பயிற்சி அளித்தல், அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டினை முழுமையாக செயல்படுத்துவதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டையும் சேர்க்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் என்பதை பறைசாற்றுகின்ற வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Olympics ,Q. Stalin , Tamil Nadu Athletes Olympics, International Competition, Medal, High quality training, Chief MK Stalin
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...