×

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணைக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு; விசாரணை ஆகஸ்ட் மாதம் தள்ளிவைப்பு

சென்னை: தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  இந்நிலையில், இந்த சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது, மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள்,  தடை கோரிய வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.  இந்த சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்று வாதிட்டனர்.

இதையடுத்து, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா என பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கமளிக்கும்படி, அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து,  உயர் நீதிமன்றங்களில் 28 வழக்குகள், உச்ச நீதிமன்றத்திலும் 4வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், கடந்த ஏப்ரல் மாதமே இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பில்லை என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். அரசு தரப்பின் வாதத்தின்படி இந்த அரசாணைக்கு இப்போதைக்கு தடைவிதிக்க முடியாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags : Govt ,Vanni ,ICC , Vanniyar Reservation, Government, ICC Order, Inquiry
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...