×

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியைகளிடம் விசாரணை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய விடுதி காப்பாளர் உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல ஆதாரங்களை அவர்கள் அளித்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது, மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்படி, 2 வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி சிபிசிஐடி போலீசார்  அவர் மீது மூன்றாவது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் 3வது வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்யவில்லை.

இதற்கிடையே, நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள சுசில் ஹரி பள்ளியின் ஆசிரியைகளான தீபா, திவ்யா, கருணாம்பிகை மற்றும் பள்ளி விடுதியின் காப்பாளர் நீரஜா ஆகியோர், தினமும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்களும் தினமும் கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரில், பாலியல் தொந்தரவுக்கு ஆசிரியைகளான தீபா, திவ்யா, கருணாம்பிகை மற்றும் விடுதி காப்பாளர் நீரஜாவும் உடந்தையாக இருந்தனர் என்று தெரிவித்துள்ளார். இதனால், நேற்று எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்து போட வந்த 4 பேரிடம் விசாரணை அதிகாரி தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

3 மணி நேரம் நடந்த விசாரணையில், சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து வந்து விட்டது குறித்தும், அவர்களுக்கு பிரத்யேகமான உணவுகள் வழங்கியது குறித்தும் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.  இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு மிகவும் நெருக்கமான  நபராக விடுதி காப்பாளர் நீரஜா செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிவசங்கர் பாபாவின் பாலியல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வரும் 4 பேரையும் குற்றவாளிகளாகவும், சாட்சிகளாகவும் சிபிசிஐடி போலீசார் பார்க்கின்றனர்.

எனவே 4 பேரும் அளித்த வாக்குமூலத்தின்படி 3வது வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் 3வது வழக்கில் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். முதல் பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், இரண்டாவது வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sivasankar Baba , Student, sexual harassment, Sivashankar Baba, assistant teacher, interrogation
× RELATED சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல்...