×

கையடக்க கணினி மையச் செயலாக்க கருவி உருவாக்கிய இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டு

சென்னை: கையடக்க கணினி மையச் செயலாக்க கருவி உருவாக்கிய இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் மகன் எஸ்.எஸ்.மாதவ், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான ஜாவா, சி, சி++, ஆகியவற்றை படித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க மினி சிபியூ கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து அதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை கேள்விப்பட்ட முதல்வர் எஸ்.எஸ். மாதவை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினை தொடங்கி, இணையதளம் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். எஸ்.எஸ். மாதவ் கண்டுபிடிப்பினை பாராட்டிய முதல்வர், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Stalin ,SS Madhav , Chief Minister Stalin pays tribute to SS Madhav, a young scientist who developed a portable computer center processing tool
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...